நீட் தேர்வு OMR தாள் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு OMR நகலை தங்களுக்கு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் தரப்பில், OMR தாள்களை வழங்கும்பட்சத்தில் அதில் உள்ள குறைபாடு என்ன என்று அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், OMR தாள்களில் உள்ள குறைபாடுகளையும் கண்டறிய முடியும் என தெரிவித்த மாணவர்கள் தரப்பு,
OMR தாள் நகல்களை வழங்க தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, OMR தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், OMR தாள்கள் விவரங்களையும், விளக்கங்களையும் உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், OMR தாள்களை மாணவர்களுக்கு வழங்க எத்தனை காலம் தேவைப்படும் என கேள்வி எழுப்பினர்.
OMR தாள்கள் மீதான குறைகளை தெரிவிக்க ஏதேனும் கால வரம்பு உள்ளதா என வினவிய நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே உள்ள நீட் வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்தும் உத்தவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.