அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான விவாதத்தில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில், முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி 90 நிமிடம் நடைபெற்றது. ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
பொருளாதார பிரச்னையை மையமாக கொண்டு நடைபெற்ற விவாதத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினை, போர் குற்றவாளி என பைன் விமர்சித்தார்.
மேலும், அமெரிக்காவுக்குள் தீவிரவாதிகள் நுழைவது, கருக்கலைப்பு விவகாரம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்றது உள்ளிட்ட விவகாரங்களில் அரசு தவறிழைத்ததாக ட்ரம்ப் சாடினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின்போது பைடன் திக்கித் திணறிய நிலையில், டிரம்ப்தான் பெரும்பாலான நேரங்களில் ஆதிக்கம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.