தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிடித்த துறையை தேர்ந்தெடுத்து 100% முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வெற்றி பெறலாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், ரூ. 5000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரம் மோதிரமும் வழங்கப்பட்டது.
முன்னதாக விழா மேடைக்கு வந்த விஜய் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்,
எல்லா துறைகளும் நல்ல துறையே. நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான்.
தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை. மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.
நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது, ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது.
ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல, அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள்.
தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள். நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் உங்கள் அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார்.