புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப் பட்டிருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ் வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.செளத்ரி வைத்த கோரிக்கையை , சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்திருக்கிறார். எனினும், இந்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில், ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகார மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனத்தின், 20வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் கொடுத்தனுப்பிய செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் மவுண்ட்பேட்டனிடம் தந்தார்.
தேவார பதிகங்கள் பாட , புனித நீர் தெளிக்கப் பட்டு, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட்பேட்டன் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைத்தார்.
சிறப்பு மிக்க அந்த வரலாற்று நிகழ்வுக்கு மீண்டும் புத்துயிருட்டும் வகையில், 2023ம் ஆண்டு மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, செங்கோலுக்கு வேத முறைப்படி பூஜைகள் செய்து , ஆதீனங்கள் புடைசூழ, செங்கோலை உயர்த்தி பிடித்த படி புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து , சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தர்மத்தின் அடையாளமாக திகழும் வரலாற்று சிறப்புமிக்க ‘செங்கோல்’ ஐ நிலைநிறுத்தினார்.
அவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும், தர்மத்துடன் இந்தியா விளங்குவதற்கு புதிய நாடாளுமன்றம் சாட்சியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு செவி சாய்க்காமல் இந்திய மக்கள் 3வது முறையாக நாட்டை வழிநடத்த பிரதமர் மோடியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், 18 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ் வாதி கட்சி எம்.பி.யின் கோரிக்கை, மக்களவை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆதீனங்கள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் நீதியின் அடையாளம் என்றும், ஆனால் அதை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி எம்.பி கூறியிருப்பது, தமிழக ஆதீனங்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்றும் விமர்சித்துள்ள, தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, சமாஜ்வாதி கட்சி எம்.பி.யின் கருத்துக்கு திமுகவின் பதில் என்ன ? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இந்தியா மற்றும் தமிழ் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி அவமதித்துவிட்டது என்றும், இந்த செங்கோல் அவமதிப்பை திமுக ஆதரிக்கிறதா ? என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய சின்னமான செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இண்டியா கூட்டனி கட்சியினரின் அறியாமையை காட்டுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் , தனது எக்ஸ் தளத்தில் தமிழில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எப்போதுமே சமாஜ்வாதி கட்சி மதிப்பதில்லை என்றும், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் செங்கோல் பற்றிய கருத்துக்கள் அவர்களின் அறியாமையை காட்டுகிறது என்றும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
முதலில் ராமரை இழிவுபடுத்திய இந்தியா கூட்ட்டணி கட்சிகள் இப்போது செங்கோலுக்கு எதிராக பேசி இருப்பது , தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பலரும் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.