சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய போது, அவர் நிதியமைச்சராக இருந்த போதும் இப்படித்தான் நிதி ஒதுக்கியதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட கடம்பை பகுதியில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு ஆவண செய்யுமா? என அத்தொகுதியின் எம்எல்ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள கடம்பை கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போதைக்கு ஐடி பார்க் உருவாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றார்.
கடம்பை கிராமத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் சென்னையில் சோழிங்கநல்லூரிலும், 187 கிலோ மீட்டர் தொலைவில் ஒசூரிலும் ஐடி பார்க் உள்ளதால், தற்போது புது ஐடி பார்க் தொடங்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறினார்.
மேலும், நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்த முடியுமெனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், நீங்கள் நிதி அமைச்சராக இருந்தபோது, நாங்கள் நிதி கேட்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன் என பேசியதால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை அமைச்சராக இருந்தபோது தகவல் தொழில்நுட்ப துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கியதாகவும், இப்போது குறைவு என்றும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ஐடி துறையில் 20 ஆண்டுகள் பின் தங்கி இருந்ததை சீர்திருத்தி செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.