இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை இந்தியா கடுமையாக மறுத்திருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த வாரம் வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இந்தியாவில், சிறுபான்மையினர்,குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிருத்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட விரும்பாத தகாத சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை வெளியிட்டு பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர், ஆண்டனி பிளிங்கன், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதைக் கவனமுடன் கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதில் கூறவில்லை என்றாலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வழக்கத்துக்கு மாறான கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த காலத்தைப் போலவே, அமெரிக்காவின் இந்த ஆய்வறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிராக முன் தீர்மானத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் சமூகக் கட்டமைப்பைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வாக்கு வங்கி அரசியல் கண்ணோட்டத்துடன் உள்ளது என்றும், ஒரு சார்புடையவர்களின் பரிந்துரையின் பேரில் தயாரிக்க பட்ட இந்த அறிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் அனைவரும் பயன்பெறவே மத்திய அரசின் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் , அரசின் திட்டங்களில் மத்திய அரசு பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கும் அமெரிக்காவில் தான் அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளன என்றும் நாளுக்கு நாள் அமெரிக்காவில் குற்ற எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும், விமர்சித்துள்ளளார்.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்கள், கொலைகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்த ரந்தீர் ஜெய்ஸ்வால்,மத ரீதியிலான வன்முறை அமெரிக்காவில் தான் அதிகரித்து வருகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப் படும் பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்களைக், கேள்விக்குள்ளாக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால், கடுமையாக பதிலளித்துளளார்.
மொத்த அறிக்கையில், சுமார் 60 பக்கங்களில், இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்பதாக போலி தோற்றத்தை உருவாக்கிய அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.