உள்நாட்டு விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ நிறுவனத்துக்குப் போட்டியாக களமிறங்க உள்ளது டாடாவின் ஏர் இண்டியா. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்துவதற்காக மத்திய அரசின் மானியத்துடன் கூடிய உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் சிறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
2023-ஆம் ஆண்டில் உள்நாட்டில் இயக்கப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் என்று கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் மூலமே இயக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவின் பங்குகளை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிய டாடா குழுமம், அந்நிறுவனத்தை மேம்படுத்த முயன்று வருகிறது. அதன் ஒருபகுதியாக உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்த டாடா நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
அதற்காக சிறு நகரங்களுக்கு இடையேயும், பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்கும், விமானங்களை இயக்க டாடா நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏர் இந்தியாவில் இருந்து பிரிந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ALLIANCE AIR நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது பற்றியும் முடிவு செய்யப்படவில்லை எனத்தெரிகிறது.
இதற்கிடையே உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்த இண்டிகோ நிறுவனமும் முயன்று வருகிறது. இந்தியாவுக்குள் இயக்கப்படும் சேவைகளுக்காக ATR – 72 வகையைச் சேர்ந்த 45 விமானங்களை வைத்திருக்கிறது இண்டிகோ.
தற்போது மேலும் 5 விமானங்களுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 78 பேர் வரை பயணிக்க முடியும்.
இதே விமானத்தை வாங்க ஏர் இந்தியாவும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. தற்போது டாடா குழுமம் விமான சேவைக்காக ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், AIX CONNECT ஆகிய 4 நிறுவனங்களை நடத்தி வருகிறது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த 4 நிறுவனங்களும் இரண்டாக மாற்றப்படும் எனத்தெரிகிறது. உள்நாட்டு விமானப் பயணிகளுக்காக கட்டண சலுகைகளை வழங்கவும் ஏர் இந்தியா தீர்மானித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுதவிர SPICE JET, ALLIANCE AIR, FLYBIG, STAR AIR, INDIAONE AIR, போன்ற நிறுவனங்களும் உள்நாட்டு விமான சேவையில் இருக்கின்றன. நிறுவனங்களுக்குள் போட்டி அதிகமாகும் போது டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக உள்நாட்டு விமான சேவையில் கோலோச்சும் இண்டிகோ நிறுவனத்துக்கு வலுவான போட்டியாளராக ஏர் இந்தியா மாறும் போது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்க வாய்ப்பிருக்கிறது. அதன்மூலம் உள்நாட்டு விமான சேவை அதிகரிப்பதுடன் பொதுமக்களும் பெரிய அளவில் பயன்பெற முடியும்.
இன்றைக்கும் தங்களது வாழ்வில் ஒருமுறையாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான எளிய மக்களின் கனவு. வானம் பார்த்து வாழ்பவர்கள் வானத்தில் பறக்க அரசும், தனியார் நிறுவனங்களும் வழிவகை செய்தால் நல்லதுதானே…