தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருக்கும் விக்ரம் மிஸ்ரியைப் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக மத்திய அரசு அரசு நியமித்துள்ளது. விக்ரம் மிஸ்ரி, வரும் ஜூலை 15 ஆம் தேதி பதவியேற்கிறார். யார் இந்த விக்ரம் மிஸ்ரி ? என்ன பின்னணி என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ராவுக்கு, கடந்த மார்ச் 12ம் தேதி ஆறு மாத பதவி கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது விக்ரம் மிஸ்ரியை புதிய வெளியுறவு செயலாளராக மத்திய அரசு நியமித்துள்ளது.
1989 பேட்ச்சை சேர்ந்த இந்திய வெளியுறவு துறை அதிகாரியான (IFS) 59 வயதான மிஸ்ரி, ஐ கே குஜ்ரால், மன்மோகன் சிங், மற்றும் பிரதமர் மோடி என இந்தியாவின் மூன்று பிரதமர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சிறப்பை பெற்றவர்.
ஐ.கே குஜ்ரால் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி இருக்கிறார்.பின்னர் ஐ.கே குஜ்ரால் பிரதமரான போது அவருக்குத் தனிச் செயலராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்.
2006 நவம்பர் முதல் 2008 செப்டம்பர் வரை இந்திய அணுசக்தி ஒப்பந்தம் பேச்சு வார்த்தைகள் நடத்தப பட்ட நேரத்திலும் வெளியுறவுத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியில் இருந்திருக்கிறார்.
2012ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணை செயலராக இருந்த விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மன்மோகன் சிங்கின் தனி செயலராக நியமிக்கப் பட்டார். அப்படியே தொடர்ந்து , 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தனிச் செயலராக பதவி வகித்தார்.
1964 ஆண்டு ஸ்ரீநகரில் பிறந்த மிஸ்ரி, ஸ்ரீநகரில் பர்ன்ஹால் , காஷ்மீரில் கார்மல் மற்றும் குவாலியரில் சிந்தியா என பல்வேறு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.
பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், XLRI இல் MBA பட்டமும் பெற்றார் .
அரசு துறைக்கு பணிக்கு வருவதற்கு முன் ஒரு விளம்பர நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய மிஸ்ரி, 1989ம் ஆண்டு வெளியுறவு பணியில் சேர்ந்து தூதராக பணியாற்றத் தொடங்கினார்.
முதலில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் துனிசியாவில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றிய மிஸ்ரி 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கும், 2016ம் ஆண்டு மியான்மருக்கும் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை, பாகிஸ்தான், பெல்ஜியம் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய மிஸ்ரி , சீனாவுக்கான தூதராக இருந்த காலத்தில் தான் 2020 இல் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் உண்டானது. பிறகு இந்திய-சீனா பேச்சுவார்த்தைகளில் மிஸ்ரி முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் கொரொனா காலத்தில், கொரொனா தடுப்பூசி தொடர்பாக, சீன-இந்திய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் என்று பாராட்டப் படுகிறார் மிஸ்ரி.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றிய விக்ரம் மிஸ்ரி, இலங்கை பாகிஸ்தான், மியான்மர், அமெரிக்கா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றிருக்கிறார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ,மிஸ்ரி தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப் ட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
வெளியுறவுத் துறை செயலராக விக்ரம் மிஸ்ரியை நியமனம் செய்திருப்பது, இந்தியாவின் சரியான ராஜ தந்திர நடவடிக்கை என்று கருதப் படுகிறது.