உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, ஒவ்வொருவரும் தங்களது தாயின் பெயரில் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசி வருகிறார். 2024 மக்களவை தேர்தல் முடிந்து 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடி, முதன்முறையாக இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர், மீண்டும் மக்களுடன் பேசுவது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
அடுத்த மாதம் இதே நேரத்தில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை கலந்துகொள்ளாத பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் இம்முறை முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாயின் பெயரால் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தம்முடைய தாயின் நினைவாக தாம் ஒரு செடியை நட்டு வைத்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அதேபோல், கேரளாவில் பழங்குடி மக்கள் தயாரிக்கும் கர்தும்பி குடைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
ஆந்திரப் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து அரக்கு காபியை ருசிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகக் கூறிய பிரதமர், டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அரக்கு காபி பல உலக விருதுகளைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
குவைத் வானொலியில் ஞாயிறுதோறும் அரை மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதற்காக அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.