விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பாமக மற்றும் அதிமுகவினர் மீது, திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு, திமுகவினர் ஆயிரக்கணக்கான மகிழுந்துகளில் வலம்வருவது அப்பட்டமான விதிமீறல் எனவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்தே திமுகவின் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தேர்தல் அதிகாரி சந்திரசேகரால், இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓரளவாவது நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வராத வெளிமாநில கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர்தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக ஒன்றியத்திற்கு இரு பார்வையாளர்கள், விக்கிரவாண்டி பேரூருக்கு ஒரு பார்வையாளர் என மொத்தம் 5 பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.