பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேட்டனர்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனதின் குரலின் 111-வது நிகழ்ச்சியை, கோவை ப்ரீத்தம் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் வசிக்கும் பெரியோர்களுடன் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
பெரியவர்கள் அனைவரும், நமது பாரதப் பிரதமர் மீது கொண்டுள்ள பேரன்பும், அவர்களது சீரிய நாட்டுப் பற்றும், நாட்டின் வளர்ச்சி மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், மனதை நெகிழச் செய்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். அவர்களின் வாழ்த்துக்கள் அனைத்தும், இந்த நாளை மேலும் இனிமையாக்கியிருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்..
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி உரையை, தென்சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.