ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளால், இந்திய மக்கள் கூடுதலாக 47 ஆயிரத்து 500 கோடி ரூபாயை செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியாவில் இயங்கும் முன்னணி செல்போன் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்றவை கட்டணத்தை உயர்த்தப் போவதாக அண்மையில் அறிவித்தன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ 12 முதல் 27 விழுக்காடு வரையும், பாரதி ஏர்டெல் 10 முதல் 21 சதவீதம் வரையிலும் வோடபோன் ஐடியா 10 முதல் 23 விழுக்காடு வரையும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 112 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 40 விழுக்காட்டை ஜியோவும், 33 சதவீதத்தை ஏர்டெல்லும், 18 விழுக்காட்டை வோடபோனும் வைத்திருக்கின்றன.
இந்நிறுவனங்களில் நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, UNLIMITED CALLS போன்றவற்றை 28 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான பழைய கட்டணத்தையும் புதிய கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவுக்கு உயர்வு இருக்கிறது என்பதை அறிய முடியும்.
அதனடிப்படையில் 209 ரூபாயாக இருந்த கட்டணத்தை 249 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது ஜியோ. 265 ரூபாயாக இருந்த கட்டணத்தை 299 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது ஏர்டெல். 269 ரூபாயாக இருந்த கட்டணத்தை 299 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது வோடபோன்.
இதே போல் பிற பிளான்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை உயர்த்தவே கட்டணத்தை அதிகப்படுத்தி இருப்பதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் கட்டண உயர்வால் இந்திய மக்கள் கூடுதலாக 47 ஆயிரத்து 500 கோடி ரூபாயை செலுத்த நேரிடும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்கள் வழங்கும் 5 ஜி சேவையின் வேகத்தை விட இந்த கட்டண உயர்வின் வேகம் அதிகமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.