பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, வெளியான செய்திகளை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட பொய் பிரசாரம் அம்பலமாகியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் அமெரிக்காவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கியது. அந்நாட்டு இராணுவத் தலைவர் அசிம் முனீர் வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திந்து விருந்துண்டு வந்தார்.
தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானின் விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஜாகீர் அகமது பாபர், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீரும் மீண்டும் சந்தித்து பேசினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய திருப்பமாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர தூர Air-to-Air ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க உள்ளதாக அமெரிக்க போர்த் துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளையும் உள்ளடக்கிய புதிய ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க போர்த் துறை வெளியிட்டிருந்தது. அரிசோனா மாகாணத்தின் டூசான் நகரைச் சேர்ந்த ரேதியான் நிறுவனத்துக்கு (Raytheon Company) வழங்கப்பட்ட சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானும் அமெரிக்காவின் அதிநவீன ‘ஏ.ஐ.எம்.-120’ ரக ஏர் டு ஏர் ஏவுகணைகளைப் பெறும் என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கெனவே, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்கா வழங்கிய F -16 போர்விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது. தொடர்ந்து இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 2016ம் ஆண்டில், பாகிஸ்தானுக்கு கூடுதல் F-16 போர் விமானங்களை விற்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட்டது.
இரண்டாவது முறை ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, பாகிஸ்தானின் F-16 விமானங்களை கடற்படை தக்க வைக்க சுமார் 397 மில்லியன் டாலர் நிதியுதவியை ட்ரம்ப் அரசு அங்கீகரித்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், எந்தவொரு சாத்தியமான AIM-120D ஏவுகணை விற்பனை மற்றும் பரிவர்த்தனைக்கு 30 நாட்களுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிவித்து ஒப்புதல் பெறவேண்டும்.
சீனாவுடன் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவைப் பேணும் பாகிஸ்தானுக்கு, அதிநவீன ஏவுகணைகளை விற்பது, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பத்தை சீனாவுக்குக் கொடுப்பதற்கு சமமானது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
சீனாவும், பாகிஸ்தானும் ஏற்கெனவே இந்திய பசிபிக் கடலில் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில்,AIM-120 ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்பது நல்லதல்ல என்றும் அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், அமெரிக்க தூதரகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்று மறுத்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு புதிய மேம்பட்ட நடுத்தர-தூர ஏர் டு ஏர் ஏவுகணைகளை வழங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதுள்ள பாகிஸ்தானின் ஏவுகணைஅமைப்புகளைப் பராமரிப்தற்காகவே இந்த ஒப்பந்தம் என்றும், பாகிஸ்தானின் எந்தப் போர் திறன்களையும் அமெரிக்கா மேம்படுத்தப்போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
















