கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணையும், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்களின் பொருளாதார நிலை காரணமாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை செயலாளர்கள், தமிழக டிஜிபி, கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.