மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பைப் போல தாங்கள் அச்சமின்றி இருப்பதாக கூறினார். மேலும், சிவபெருமான் புகைப்படத்தை அவர் தூக்கிக் காண்பித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவை அலுவல்களை மட்டும் விவாதிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்துக்களையும் வன்முறையாளர்கள் என சித்தரிப்பது மிகவும் தீவிரமான பிரச்சினை என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
கோடிக்கணக்கானோர் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவது குறித்து ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்றும், வன்முறையை மதத்துடன் தொடர்புபடுத்துவது தவறு என்றும் தெரிவித்தார். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
விவாதத்தின் மீது பேசிய பிரதமர் மோடி,
எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் தனக்கு கற்றுத் தந்ததாக கூறினார்.
பின்னர், அக்னிவீரர் திட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, ஆட்சேபம் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிவீரர் திட்டத்தை விமர்சித்து தேசத்தை ராகுல் காந்தி தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.