2033ஆம் ஆண்டுக்குள் அயோத்தியை உலகின் சிறந்த நகரமாக்க, உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII), “மைக்ரோ-எண்டர்பிரைஸ் டெவலப்மென்ட் புரோகிராம்ஸ்”- MEDP என்ற பயிற்சித் திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை மக்களிடையே சுயவேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப் கிராமப்புறங்களில் பல பயிற்சிகளை நடத்தி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் உத்தரபிரதேச சுற்றுலாத் துறையுடன் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரை உலகின் சிறந்த நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்காக சுமார் 85 000 கோடி ரூபாய் முதலீட்டில் செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான, உத்தர பிரதேசஅரசு, அயோத்தியின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளடக்கிய 27 முக்கிய அம்சத் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, சாலைகள் மற்றும் சாலையோரங்களில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்துதல், அயோத்தியை மற்ற நகரங்களுடன் இணைக்கும் ரயில் பாதைகளை விரிவுபடுத்துதல், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களை நவீனப்படுத்துதல், ஹெலிகாப்டர் சேவைகள் வழங்குதல், விமான நிலையத்தை மேம்படுத்துதல் என திட்டமிடப்பட்டுள்ளது.
கோயில் அருங்காட்சியகம், மெழுகு அருங்காட்சியகம், சந்தியா சரோவர், அயோத்தியின் சந்தை உட்பட அயோத்தியில் உள்ள 37 மதத் தலங்களை நவீனமயமாக்கவும் பல திட்டங்கள் அயோத்தியில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நகரின் முக்கியமான 39 சாலைகளில் உள்ள சந்திப்புக்களில் புராண கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள புனித நதியான சரயுவில், சூரிய சக்தியில் இயங்கும் நவீனப் படகு போக்குவரத்து சேவைகள் மற்றும் விதவிதமான நீர் விளையாட்டுக்கள் அறிமுகப் படுத்தப் பட இருக்கின்றன.
சரயு நதிக் கரையில் சுற்றுலாவினரை மகிழ்விக்கும் வகையில், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
இது மட்டுமில்லாமல் , அயோத்தியில் உள்ள பிற கோயில்களையும் புனரமைப்பு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய இடங்களில், 140 மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகள், 28 வெவ்வேறு மொழிகளில் வழிகாட்டி பலகைகள், வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன அயோத்தியின் வளர்ச்சிக்காக உருவாக்கிய திட்டங்கள் சர்வதேச தரத்தில் உள்ளதாக இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவீன அயோத்தியின் ஒரு பகுதியாக, நகரில் சர்வதேச விமான நிலையமும் சர்வதேச பேருந்து நிலையமும் உருவாக்கப்பட்டு வருகின்றன
குறிப்பாக, அயோத்தியில், குப்தர் காட் முதல் லக்ஷ்மண் காட் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 400க்கும் மேற்பட்ட சூரிய ஒளி தெரு மின் விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக நீளமான சோலார் தெருவிளக்கு திட்டம் இது தான் என்று இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். சுனில் சுக்லா தெரிவித்திருக்கிறார்.
இந்த திட்டங்களில் பல ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன என்றும், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.