உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து தொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது புதிய குற்றவியல் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், ஃபுல்லெரா என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் பிரசங்கம் நிகழ்த்தினார். இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள், எட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
மாநில அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினனார். ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்த விபத்திற்கு காரணமான ஆன்மீக பிரசங்கத்தை நடத்திய போலே பாபா தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸில் விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள போலே பாபாவின் அறக்கட்டளையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இவ்விபத்து தொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 80 ஆயிரம் பேர் கூடுவதற்காக அனுமதி பெற்ற நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால், நெரிசல் ஏற்பட்டு இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.