அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மாநிலங்களவை இன்று கூடியதும், உத்திரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சியை 3-வது முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கட்சியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்த எதிர்க்கட்சிகள் கடைசியில் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெறுவதோடு, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், அரசியல் சாசனம் என்பது வெறும் எழுத்தல்ல எனவும் உணர்வு என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் சாசனம் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது இடையூறு செய்ததைப்போன்றே இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி இடையூறு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, பொய்களை மட்டுமே பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாரம்பரியமிக்க மேலவையை எதிர்க்கட்சிகள்
அவமதிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.