தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிவிட்டு உருக்கமாக கடிதம் எழுதிச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சித்திரை செல்வின், தனது மகனை காண சென்னை சென்றார்.
அப்போது அவருடைய வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் வீட்டின் சாவியை கொடுத்து பராமரிக்க கூறியுள்ளார்.
இந்நிலையில் பணிப்பெண் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் வீட்டிலிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையன் எழுதியிருந்த கடிதமும் சிக்கியது.
அதில் தன்னை மன்னித்து விடுமாறும், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருடிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தை கைபற்றிய போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.