விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசாரங்குப்பத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க திமுக கிளைச்செயலாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளை சாலையில் கொட்டி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசாரங்குப்பம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திமுக கிளைச் செயலாளர் ராமலிங்கம் வீட்டில் வேட்டி, சேலை, சட்டை உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாமகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ராமலிங்கம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பாமகவினர் அவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி, சேலை ஆகியவை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.