உத்தரப் பிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் மற்றும் குழந்தைகளும் எனத் தெரியவந்துள்ளது. யார் இந்த போலே பாபா ? அவரதுஆன்மீக சொற்பொழிவுக்கு ஏன் இத்தனை கூட்டம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த செவ்வாய்கிழமை உத்தரபிரதேசத்தில், ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் பலியான மோசமான சம்பவத்துக்குக் காரணம் போலே பாபா தான் என்று முன்னாள் காவல்துறை டிஜிபி விக்ரம் சிங் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்த நிலையில், தற்போது, தலைமறைவாகி இருக்கும் போலே பாபா மீது, பாரதிய நியாய சன்ஹிதா 105, 110, 126 (2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
58 வயதாகும் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் விஸ்வ ஹரி, உத்தர பிரதேசத்தில், காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பகதூர் நகர் கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சூரஜ் பால் சிங் ஆகும். குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த இவரின் அண்ணன் அண்மையில் இறந்த நிலையில், தம்பி ராகேஷ், சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
போலே பாபா, ஆரம்பத்தில் உத்தர பிரதேச காவல் துறையில் காவலராக பணிபுரிந்தார் என்றும், உளவுத்துறையிலும் இருந்துள்ளார் என்றும், காவல் துறை வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற போது, கடைசியாக ஆக்ராவில் பணியிலிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறையை விட்டு வெளியேறிய பிறகு, தன்னுடைய பெயரை போலே பாபா என்று மாற்றிக்கொண்ட இவருக்குத் திருமணமான போதிலும் குழந்தைகள் இல்லை. எனவே தனது மனைவியுடன் சேர்ந்து ஆன்மீக அவதாரம் எடுத்தார். இவரது மனைவி மாதா ஸ்ரீ என்றே அழைக்கப் படுகிறார்.
எந்த குரு நாதரும் தமக்கு இல்லை . தாமே சர்வ வல்லமையுள்ள குரு என்று சுயபிரகடனம் செய்து கொண்ட போலே பாபா நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகள் ‘மானவ் மங்கள் மிலன் சத்பவன சமகம்’ என்று அழைக்கப்படுகிறது.
இவரின் ஆன்மீக நிகழ்ச்சிகள், பெரும்பாலும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்படுகின்றன. இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளை போலே பாபா தன் மனைவியுடன் இணைந்தே நடத்தி வருகிறார்.
ஆங்கிலேயர் ஆடை பாணியில் வெள்ளை நிற சூட், டை மற்றும் ஷூ அணிந்து ஆன்மீக சொற்பொழிவாற்றும் போலே பாபா , சில சமயங்களில் குர்தா-பைஜாமாவிலும் நிகழ்ச்சி நடத்துவதுண்டு.
ஆரம்பத்தில், பொருளாதாரத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களும், உத்தர பிரதேசத்தின் பிரஜ் மண்டலத்தின் ஆக்ரா மற்றும் அலிகார் பகுதியில் உள்ளவர்களும், நாராயண் சாகர் விஸ்வ ஹரி பாபா என்றும் அழைக்கப்படும் போலே பாபாவின் பிரதான பக்தர்களாக இருந்தார்கள்.
இப்போது, உத்தரபிரதேசத்தைத் தாண்டியும் உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி என தன் ஆன்மீக செல்வாக்கை வளர்த்திருக்கிறார் போலே பாபா. குறிப்பாக, தொழிலதிபர்களுடனும் அரசியல்வாதிகளுடன் போலே பாபா மிகவும் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருக்கிறார். ஹிந்துக்கள், சீக்கியர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்களும் இவரது பக்தர்களாக உள்
வட இந்தியா முழுவதும் தனக்கான ஆன்மீக ஆதரவாளர்களை கொண்டிருக்கும் போலே பாபா, சொந்த ஊரில் ஒரு ஆசிரமம் கட்டியிருக்கிறார்.
பல நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களை போலே பாபாவின் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக பதிவு செய்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும்,உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் கடந்த ஆண்டு, போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தனது எக்ஸ் தளத்தில், பாபாவின் புகைப் படங்களைப் பகிர்ந்து, ‘பிரபஞ்சம் முழுவதும் நாராயண் சகர் ஹரிக்கு நித்திய மகிமை உண்டாகட்டும்.’ என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த சமூக ஊடகங்களிலும் தனக்கென ஒரு கணக்கை வைத்துக் கொள்ளாத பாபா போலே மீது, பாலியல் குற்றச் சாட்டுகள் உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் திவேதி பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.