சென்னை தியாகராய நகரில் முக்கிய பாலம் இடிக்கப்பட்டு, அண்ணா சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டுப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாற்று ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!
சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அதற்கென அடையாளமே மறையும் அளவிற்கு மாறி இருக்கிறது.
இதற்கு காரணம், உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதுதான்.
இதனால், வடக்கு உஸ்மான் சாலை முதல் தி.நகர் டிப்போ வரை போடப்பட்ட பாலம் மூடப்பட்டுள்ளதால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும், சாலையோர வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தி.நகரில் முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அடுத்தமுறை தி.நகருக்கு வரவேண்டாம் என தோன்றுகிறது என்றும் கூறும் பொதுமக்கள், அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான் இருக்கும் என்றால் தி நகர் வருவதையே மறந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.
தி.நகர் வந்துபோக முன்பு அரை மணி நேரம் ஆன நிலையில், தற்போது இரண்டு மணி நேரம் ஆவதுடன், பெட்ரோல், டீசல் செலவும் அதிகமாகிவிட்டது. இனியும் மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளா விட்டால், தி.நகரையே மறந்துவிட வேண்டியதுதான் என வேதனை தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
ஒரு வருடத்திற்கு பிறகு சீரான பாலம் அமையும் என்றும், போக்குவரத்தும் சீரடையும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தி.நகரில் சாலையோரத்தை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்படுகள் செய்ய தமிழக அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.