கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 81 சவரன் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காரவிளை பகுதியை சேர்ந்த சுகன்யா, திருமண நிகழ்வுகளுக்கு செல்லும்போதெல்லாம் உறவினரான சௌமியாவிடம் நகை வாங்கி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கணவர் அஜின் மற்றும் ஈத்தாமொழி பூக்குடியிருப்பை சேர்ந்த சிவகுகன் ஆகியோருடன் சௌமியாவின் வீட்டுக்கு சுகன்யா வந்துள்ளார்.
அப்போது, திருமண நிகழ்விற்கு செல்வதால் தங்க நகைகளை கொடுக்குமாறு வழக்கம்போல் கேட்டுள்ளனர். இதனை நம்பி சௌமியா தன்னிடம் இருந்த 81 சவரன் நகையையும், 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட தேதியில் நகை, பணத்தை திரும்ப தராமல் 3 பேரும் ஏமாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சௌமியா காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சுகன்யாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கணவன் அஜின் மற்றும் சிவகுகனை தேடி வருகின்றனர்.