தமிழகத்தில் சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
சிவகங்கையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், பொது மக்கள் ஐஸ் கட்டிகளை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். மேலும், சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், குமாரபுரம், மார்த்தாண்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவில்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக எட்டயபுரம் சாலை, புது ரோடு சாலை மற்றும் நகர் பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.