கோவை மற்றும் நெல்லை மேயர்களின் ராஜினாமா, சிறப்புக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் மேயராக இருந்து வந்த திமுகவைச் சேர்ந்த கல்பனா, தனது உடல்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் விக்டோரியா அரங்கில் நடைபெற்றது. அப்போது, மேயர் கல்பனா ராஜினாமா செய்தது குறித்த தீர்மானத்தை, மாநகராட்சி ஆணையர் மன்றத்தின் பார்வைக்காக வைத்தார். அதனை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் மேயர் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ஒரு வழியாக தீர்மானம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நெல்லை மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம், மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை மன்றத்தின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுவதற்காக, துணை மேயர் தலைமையில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேயரின் ராஜினாமா கடிதம், மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடப்பட்டு, பின்னர் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.