கிழக்கு லடாக்கில், பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சீனாவின் சிர்ஜாப் ராணுவத் தளத்தில் நிலத்தடி பதுங்கு குழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த சீன ராணுவத் தளத்தின் செயற்கை கோள் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
லே லடாக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற ஏரிகளில் ஒன்றான பாங்காங் ஏரி, கிட்டத்தட்ட 4,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிக உயரமான உப்பு நீர் ஏரியாகும். சுற்றிலும் வறண்ட மலைகளுக்கு,மத்தியில் இந்த ஏரி அமைந்திருக்கிறது.
“உயர்ந்த புல்வெளி ஏரி” என்று அழைக்கப் படும் பாங்காங் ஏரி வெவ்வேறு நேரங்களில் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் தன் வண்ணங்களை மாற்றும் அழகுடையது. ஏறக்குறைய 160 கிமீ நீளம் கொண்ட பாங்காங் ஏரியின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கும், மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்கும் உரிமை உடையதாக இருக்கிறது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய போர் பதற்றம் தற்போது வரை தொடர்கிறது. பாங்காங் ஏரியின் ஒருபுறம் இந்திய ராணுவமும், மறுபுறம் சீன இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையே, ராணுவத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை பலசுற்றுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், இந்திய எல்லைப் பகுதியில், சீனா தனது அடாவடி செயல்பாடுகளை நிறுத்தியதாக தெரியவில்லை.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியை சுற்றியுள்ள பகுதியில், சீன இராணுவ தளம் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலத்தடி பதுங்கு குழிகளும் கட்டப்பட்டுள்ளன. ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும் கவச வாகனங்களுக்கான சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பாங்காங் ஏரியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களின் வீரர்களின் தலைமையகமாக இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் செயல்படுகிறது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் அமைந்திருக்கிறது. இந்தியா உரிமை கொண்டாடும் இடத்தில் சீனா இந்த ராணுவ தளத்தை கட்டி இருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
2020 மற்றும் 20201 ஆம் ஆண்டுகளில் சீனா இந்த இராணுவத் தளத்தைக் கட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய எல்லையில் தன்னை பலப்படுத்திக்கொள்ள சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Line of Actual Control-ல் மறுபுறம், சாலைகளையும் பாலங்களையும் சீனா கட்டி வருகிறது.
கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட, செயற்கை கோள் புகைப்படங்களில், சிர்ஜாப் இராணுவத் தளத்தின் பல்வேறு அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன.
சிர்ஜாப் இராணுவத் தளத்தில், ஒரு பெரிய நிலத்தடி பதுங்கு குழியின் எட்டு சாய்வான நுழைவு வாயில்கள் உள்ளன. இதேபோல், பெரிய பதுங்கு குழிக்கு அருகில் மற்றொரு சிறிய பதுங்கு குழியும் உள்ளது. சிறிய பதுங்கு குழிக்கு ஐந்து நுழைவு வாயில்கள் இருக்கின்றன.
சிர்ஜாப் இராணுவத் தலைமையகத்துக்கான பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்கள், மூடப்பட்ட இராணுவ கவச வாகனங்கள் நிறுத்துமிடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களிலிருந்து இராணுவ வாகனங்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த தங்குமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லடாக் எல்லை பகுதியில் செயற்கை கோள்களால் படம் பிடிக்க முடியாத சாலைகளை சீனா கட்டியுள்ளது. இந்த சாலைகளுடன் சிர்ஜாப் இராணுவத் தலைமையகம் இன்டர்நெட் தொழிநுட்பத்தால் இணைக்கப் பட்டுள்ளது. இதனால், அவசியம் ஏற்படும் போது, பீரங்கிகளையும், இராணுவ கவச வாகனங்களையும் எளிதில் எல்லை பகுதிக்கு கொண்டு வரமுடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2020ம் ஆண்டு ஏற்பட்ட சீனா எல்லை மோதலுக்குப் பின், இந்தியா தனது எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இராணுவத் தளவாடங்களை எல்லைக் கோட்டுக்கருகே கொண்டு செல்வதற்கான சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள், விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளை இந்தியா அதிகளவில் உருவாக்கி இருக்கிறது.
திபெத், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா தனது ராணுவ செயல்பாடுகளால், கடும் போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்று நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.