திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.
இந்தியாவில் HIV பாதிப்பு கண்டறியப்பட்ட 1986-ஆம் ஆண்டு முதல் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 47 மாணவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது பெரும் துயரம்.
TRIPURA STATE AIDS CONTROL SOCIETY சமர்ப்பித்திருக்கும் அறிக்கையின்படி, மே 2024 வரை திரிபுரா மாநிலத்தில் 8,729 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 674 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்களில் 4 ஆயிரத்து 570 பேர் ஆண்கள். ஆயிரத்து 103 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. பாதிக்கப்பட்டவர்களில் 828 பேர் மாணவர்கள் என்பதுதான் மிகுந்த மனவேதனையை தரும் செய்தி. 220 பள்ளிகள், 24 கல்லூரிகள் என மாநிலத்தில் இருக்கும் பல கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலத்திலிருக்கும் 164 சுகாதார மையங்களிலிருந்தும் இந்த தகவல்கள் சேகரிப்பட்டிருக்கின்றன.
மாணவர்களிடையே HIV பரவியதற்கு போதைப் பழக்கமே காரணம். ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியால் பெருந்தொற்று பரவியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணக்காரர்களும் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஏன் எதற்கு என்று கேட்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக அளவு பணத்தை கொடுத்ததே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் வெளி மாநிலங்களுக்கு படிக்கச் சென்றுள்ளதாகவும் அவர்கள் திரிபுராவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அண்மைக் காலமாகவே வடகிழக்கு மாநிலங்கள் பற்றி வெளியாகும் செய்திகள் நல்ல முறையில் இல்லை. மணிப்பூர் கலவரம், அசாம் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக வந்து சேர்ந்திருக்கிறது திரிபுரா துயரம்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திரிபுரா அரசு விளக்கமளித்துள்ளது. 828 மாணவர்கள் HIV-ஆல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் 47 பேர் உயிரிழந்திருப்பதும் உண்மைதான் என்று கூறியிருக்கும் திரிபுரா அரசு, இந்த தொற்றுகள் அனைத்தும் 2007 – 2024-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
மேலும் 2022- 23-ஆம் ஆண்டில் மட்டும் திரிபுராவில் மொத்தம் ஆயிரத்து 847 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் 2023-24-ஆம் ஆண்டில் ஆயிரத்து 790 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.