அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் எழும்பூரில் உள்ள அவரது திருவுருவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,
“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எம் ஜி ஆர், ஜெயலலிதா 50 ஆண்டு காலம் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை ஏன் டெபாசிட் இழந்தது? பல்வேறு இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடம் சென்றதற்கு என்ன காரணம்?
அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதை மாபெரும் இயக்கமாக யாராலும் வெல்லாத முடியாத இயக்கமாக உருமாற்றினார்.
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உட்பட 10 தேர்தல்களில் அதிமுக வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் பலமான கட்சியாக எடுத்துச் சென்றாலும் பொதுமக்கள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் தேர்தல் வரலாறு.
இன்றைக்கு இருக்கின்ற நிலையில் பொதுமக்களுடைய நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஜெயக்குமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவருடைய வாயிலிருந்து நல்ல வார்த்தையை வராது.
இந்த தேர்தல் தோல்வியின் முதல் தோல்வியின் போதே நான் சொன்னேன், நாம் அனைவரும் அந்தந்த பகுதிகளில் கட்சி வளர்ப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் கேட்கவில்லை.
அதிமுகவினர் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என அறிக்கை விட்டார்கள். ஆனால் 83% வாக்கு பதிவாகி இருக்கிறது என்றால் அதிமுகவினர் வாக்கு அளித்திருக்கிறார்கள்.
விக்கிரவாண்டியில் அதிமுகவினர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும் எனத் தெரிவித்தார்.