சாலைகளில் சுற்றித்தெரியும் தெருநாய்களால் அச்சமடைந்த சென்னைவாசிகளுக்கு இனி நாய்களின் தொல்லைகள் இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது நாய்கள் கணக்கெடுக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த திட்டம் தெருநாய்களை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சமீபகாலமாக சென்னையில் தெருக்குத் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்பட்டதுடன், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை துரத்தி துரத்தி கடித்த சம்பவங்களும் அரங்கேறின.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தான், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், வேர்ல்ட் வைல்ட் வெட்னரி சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நாய்கள் கணக்கெடுக்கும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது.
சென்னையில் 15 மண்டலங்களில், 36 குழுக்கள் இணைந்து இந்த பணியினை 20 நாட்களில் முடிக்கப் போவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கணக்கெடுப்பின்போது நாயின் இனம், நோய் தொற்றுக் கொண்டவையா?, கருத்தடை செய்யப்பட்டவையா? என்பதெல்லாம் WVS என்ற செயலில் குறித்து வைக்கப்படும். இதன் மூலம் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டப்படுத்த முடியும் என்கிறார் கால்நடை மருத்துவர் ஜானகி.
இந்த WVS செயலி தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு பெரிதளவில் உதவுவதுடன், நாயின் தன்மையை எளிமையாக அடையாளப்படுத்த முடியும் என்கிறார் நாய்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர் ஜெயராமன்.
சென்னையில் தெருநாய்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதால், இனி தெருநாய்கள் தொல்லை இருக்காது என்ற நம்பிக்கையில் சென்னைவாசிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.