மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனியார் காரில் சைரன் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாள், மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
UPSC தேர்வில் அகில இந்திய ரேங்க் 821 பெற்ற பூஜா கேத்கர், 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர், தனது தனிப்பட்ட ஆடி சொகுசு காரில் சைரனைப் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. அவர் தமது சொந்த காரில். மகாராஷ்டிரா அரசு சின்னத்துடன் கூடிய விஐபி நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. ” இதுபோல பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொதுவாக இல்லாத சலுகைகளை அவர் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.
கூடுதல் ஆட்சியர் அஜய் மோரின் அறையையும், பூஜா கேத்கர் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதல் ஆட்சியர் அனுமதியின்றி அலுவலக அறைகளிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
மேலும், வருவாய் உதவியாளரிடம் தமது பெயரில் ஒரு லெட்டர்ஹெட், பெயர்ப்பலகை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், போதுமான பணியாளர்கள் கொண்ட அலுவலக இடம் ஆகியவற்றைக் கேட்டு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்..
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், பூஜா கேத்கரை புனேவில் இருந்து வாஷிமுக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையேற்று, பூஜா கேத்கரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.
புனேவில் உதவி ஆட்சியராக இருந்த பூஜா கேத்கர் தனது பயிற்சியின் மீதமுள்ள காலத்தை வாஷிம் மாவட்டத்தில் பணியாற்றுவார்” என்று உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பூஜா கேத்கர் மீது இன்னொரு புகார் எழுந்திருக்கிறது.
UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஊனமுற்றோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) சான்றிதழ்களைப் போலியாக சமர்ப்பித்திருக்கிறார் என்றும், சலுகைகளைப் பெற, அவர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அளித்த பிரமாணப் பத்திரத்தில், தான் பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்திருக்கிறார். 40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அவரது பெற்றோர் வைத்துள்ள நிலையில் ஒபிசி கிரீமிலேயர் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பூஜா கேத்கருக்கு, அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS) தனது பார்வை மற்றும் மனநல குறைபாடுகளை உறுதி செய்வதற்காக கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐந்து முறை அழைக்கப் பட்ட போதிலும், அவர் மருத்துவ சோதனைக்கு வராமல் தவிர்த்து விட்டார். ஆறாவது முறையாக அழைத்தப் போது மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டார். அந்த சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடோ, மனநல பாதிப்போ இல்லை என தெரியவந்தது.
விதிகளை மீறி ஆடி காரில் சிவப்பு ஊதா நிற சைரன் விளக்கை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூஜா கேத்கர் ஓபிசி இடஒதுக்கீட்டில் UPSC தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால்தான் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
ஆனால், பூஜாவின் தந்தை திலீப் கேத்கரும் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என்றும், ஆண்டு வருமானம் ரூ.43 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவர் ஓபிசி பிரிவில் தேர்வு செய்யப்பட்டது செல்லுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து,மத்திய அரசு கூடுதல் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி இரண்டு வாரத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது .