பழனி கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவீதிகளில் பக்தர்களை தவிர வாகனங்கள் செல்ல தடை விதித்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனால் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 150 வீடுகள் அகற்றப்பட்டன. மேலும், கிரிவீதியில் எந்த வாகனமும் செல்ல முடியாத வகையில் இரும்பு குழாய்கள் மூலம் அடைக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து பழனி அடிவார பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பழனிக்கு வரும் பக்தர்கள் பாதிப்படையாத வகையில் இலவச உணவு வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்களுக்கு அன்னதானம், பால், பழங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.