விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திமுகவின் அத்துமீறல் தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், மதுவையும், பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு ஓட்டுக்கும் திமுக 10 ஆயிரம் வரை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களுக்கும், அரிசி மூட்டைகளுக்கும், மதுவுக்கும், செலவழிக்கப்பட்ட 250 கோடி ரூபாய்க்கும் கிடைத்த வெற்றி என இராமதாஸ் விமர்சித்துள்ளார்.
ஆனால், மக்களை மட்டுமே நம்பி களமிறங்கிய பாமக, திமுக அரசின் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்
ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு பாமக வேட்பாளர் அன்புமணி 56 ஆயிரத்து 261 வாக்குகளை பெற்றதன் மூலம், விக்கிரவாண்டி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிதான் உண்மையான வெற்றி கிடைத்துள்ளதாக இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.