அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த தாக்குதலை அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் மற்றொரு நபர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.