தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அந்த வகையில் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 834 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
இந்த எண்ணிக்கை தற்போது அதிகளவு உயர்ந்து கடந்த 42 நாட்களில் மட்டும் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தற்போதைய டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 554ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது (OUT).