தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமாகா சார்பில் நடைபெற்ற கர்மவீரர் காமராஜர் 122வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கிய பள்ளிகள் இன்று தலைமை ஆசிரியர் இல்லாமல் தவிக்கிறது. சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியால் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் நீரின்றி வறண்டு கிடக்கிறது.
சமீபத்தில் NITI aayog சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 2050ஆம் ஆண்டு தனி மனித தேவைக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. சாராயம் ஆறாக ஓடுவதைக் கட்டுப்படுத்தவும் அவர்களுக்கு மனம் இல்லை.
காமராஜர் ஆட்சி தருவோம் என்று பேசும் கட்சியின் தலைவர் கடந்து வந்த பாதையைக் கடந்த பத்து நாட்களாக விவாதித்து வருகிறோம்.
தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் கூட்டணி அமைக்க முடியாது என்று உறுதியுடன் சொன்னவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இதைச் சொல்லமுடியுமா?
2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. தமிழக மக்களுக்கு மீண்டும் காமராஜரின் ஊழலற்ற மக்கள் ஆட்சியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே வழங்கமுடியும் எனத் தெரிவித்தார்.