அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சுடப் பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத் துறை , ரகசிய சேவை முகமை, அமெரிக்க உள்துறை மற்றும், இராணுவத் துறையும், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் ? சுட்ட இளைஞனின் பின்னணி என்ன ? இதனால் அமெரிக்க தேர்தலில் என்ன மாதிரியான திருப்பம் ஏற்படும் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பொதுக்கூட்ட மைதானத்தில், பார்வையாளர்கள் முன்பு, நின்று கொண்டிருந்த போது, தன் காதில் துப்பாக்கி தோட்டா துளைத்து சென்றதாக கூறிய டொனால்ட் ட்ரம்ப் ,தற்போது தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் , அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் கொல்லப் பட்டதாகவும் ,மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வரும் 22 ஆம் தேதி, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முதன்மை விசாரணை அமைப்பான மேற்பார்வை குழு முன் ஆஜராகி, சாட்சியம் அளிக்குமாறு ரகசிய சேவை முகமையின் இயக்குனர் கிம்பெர்லி சீட்டிலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நோக்கி சுட்ட 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சேவை முகமை கொல்வதற்கு முன்னரே, அவரால் சுட முடிந்திருப்பது அமெரிக்க FBI உட்பட பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் ,தனது தந்தையின் AR-15 ரக துப்பாக்கி மூலம்,சம்பவ இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து சுட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளன.
(BRETH)
ஒரே இரவில் உலக அளவில் பிரபலமாகி விட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்படித்திருக்கிறார். மேலும் பள்ளியில் படிக்கும் போது, பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூவின் படி, தேசிய கணிதம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்பில் “நட்சத்திர விருதை” பெற்றிருக்கிறார்.
உள்ளூர் துப்பாக்கி சுடும் அமைப்பில், குறைந்தது ஒரு ஆண்டுக்கும் மேலாக உறுப்பினராக இருந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், உயர்நிலைப் பள்ளியில், துப்பாக்கி சுடும் அணியில் சேர பல முறை முயற்சி செய்த போதிலும், திறமை இன்மையால் நிராகரிக்கப்பட்டான் என்று தி போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த படுகொலை முயற்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும் என்று FBI இன் சிறப்பு அதிகாரியான ரோஜெக் கூறியிருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் பிரச்சாரக் குழுவுக்கு சுமார் 1250 ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறான் என்றும் , தனக்கு 18 வயதை அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வாக்களிக்க குடியரசுக் கட்சியினராக தன்னை பதிவு செய்திருக்கிறான் என்றும் அரசு வாக்காளர் பதிவுகளின் படி தெரிய வந்துள்ளது.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் , உயிரோடு இருந்திருந்தால், இந்த ஆண்டு நடக்கும் தேர்தலே அவன் வாக்களிக்கும் முதல் தேர்தலாக இருந்திருக்கும் .
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவர்களது சமூக வலைத்தளங்கள் குறித்தும் டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்தும் புலனாய்வு விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதில், துப்பாக்கிகளை வாங்கும் மற்றும் விற்கும் வணிகச் சந்தைகளுடன் தொடர்புகள் கண்டறிய பட்டுள்ளன என்று USA TODAY தெரிவித்துள்ளது.
எந்த வித குற்றப் பதிவும் இல்லாத தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், முதியோர் இல்லத்தில் சேவைகள் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது . இந்நிலையில் , ஏன் முன்னாள் அதிபரை அவர் கொல்ல முயற்சித்தார் ? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடந்துவரும் நிலையில் , வரும் நாட்களில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.