100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு புகாரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரள மாநிலத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், பிரகாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட சிலர் மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், 40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் கைது செய்துள்ளனர். அவரை தமிழகம் அழைத்துவந்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.