போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்கிடம் அமலாக்கத் துறையினர் மூன்று நாட்கள் விசாரணை நடத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையும் கைது செய்தது.
இந்த வழக்கில், சிறை மாற்று வாரண்ட் மூலமாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜாஃபர் சாதிக்கிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி அல்லி, விசாரணை நிறைவில் ஜாஃபர் சாதிக்கை 3 நாள் அமலாக்கத் துறை காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டார். வரும் 18-ஆம் தேதி மட்டும் ஜாஃபர் சாதிக் தனது உறவினரை சந்திக்க அனுமதித்த நீதிபதி, 19-ஆம் தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அமலாக்கத் துறையினருக்கு உத்தரவிட்டார்.