பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து டெல்லிக்கும் நம்ம யாத்ரி செயலி விரிவுப்படுத்தப்படுவதால் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக மாறியுள்ளது.
வாடகைக்கு கார், ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபர் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இதில் கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர் இணைந்து சவாரிகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இதனால் தங்களுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை என்ற புகார் ஓட்டுநர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் கொடுக்கும் மொத்த பணத்தையும் ஓட்டுநர்களே எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியுடன் கொண்டு வரப்பட்டது நம்ம யாத்ரி ஆப். மத்திய அரசின் ONDC-க்கு கீழ் செயல்படுவதால் நம்ம யாத்ரி ஆப் ஜீரோ கமிஷன் என்ற அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் கொடுப்பதற்கு பதிலாக ஓட்டுநர்கள் சந்தா செலுத்தினால் போதும். நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு ட்ரிப்புகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஒரு ட்ரிப்புக்கு மூன்றரை ரூபாய் செலுத்த வேண்டும். அதுவும் முதல் 10 ட்ரிப்புகளுக்குத்தான். அதற்குப்பின் கட்டணம் கிடையாது.
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் நம்ம யாத்ரி ஆப் நடைமுறைக்கு வந்தது. இது ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் குறைந்த கட்டணம். ஒரு மணி நேரத்துக்குள் 10 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணிக்க 190 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நேரம் மற்றும் தொலைவுக்கு காரை பயன்படுத்தினால் வண்டிக்கு ஏற்ப 250 முதல் 390 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
10 கிலோ மீட்டரையும் ஒரு மணி நேரத்தையும் தாண்டிவிட்டால் ஒரு கிலோ மீட்டருக்கு 10 முதல் 21 ரூபாயும், ஒரு நிமிடத்துக்கு 3 ரூபாயும் செலுத்த நேரிடும். இரவு நேரம் என்றால் 250 ரூபாய் நிலையான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிக்அப் சார்ஜ், சுங்கக்கட்டணம் போன்றவை தனி.
பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள நம்ம யாத்ரி ஆப்பை டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக நம்ம யாத்ரி மாறியுள்ளது.