அமெரிக்க முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அந்நாட்டு ரகசிய சேவை முகமையின் செயற்பாடுகள் கடும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதற்கு நேர் மாறாக, இந்திய பிரதமர்களை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழு சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் ரகசிய சேவை முகமை 1865ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் கள்ளப் பணத்தைத் தடுப்பதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. காலப்போக்கில், பாதுகாப்பு மற்றும் விசாரணை ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியது.
ஆரம்பத்தில் அரசின் நிதி கருவூலத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த அமெரிக்க சேவை முகமை, தற்போது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கி வருகிறது. முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள், துணை அதிபர்கள், அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பது ரகசிய சேவை முகமையின் முக்கிய பணிகளாகும்.
இத்துடன், அயல்நாட்டு அரசு தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் மேற்பார்வையிடுவதும் மற்றும் நாட்டின் முக்கிய தேசிய நிகழ்வுகளை மேற்பார்வையிடுவதும் இந்த இரகசிய சேவை முகமை தான் .
இது போதாதென்று , கள்ளபணம், நிதி மோசடி மற்றும் இணைய குற்றங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த குற்றங்களையும் இந்த முகமையே விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது.
மேரிலாந்தில் உள்ள ஜேம்ஸ் ஜே ரவுலி பயிற்சி மையத்தில் கடுமையான பயிற்சி பெறும் ரகசிய சேவை முகமையின் பாதுகாப்பு அதிகாரிகள் புலனாய்வு நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இரகசிய சேவை முகமை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு அதி நவீன ஆயுதங்களைத் தங்கள் பணிகளுக்காக பயன்படுத்துகிறது.
எனினும், அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், படுகொலை முயற்சியில் சிக்கி, தெய்வாதீனமாக உயிர் பிழைத்திருப்பதும் அமெரிக்காவில் தான் அதிகம் என்கிறது சர்வதேச புள்ளிவிவரம்.
ஆனால், இந்தியாவில் சிறப்புப் பாதுகாப்பு குழு, சிறப்பாக பணி செய்து, பிரதமர்களைக் கண் போல பாதுகாத்து வருகிறது.
1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1985ம் ஆண்டு SPG தொடங்கப் பட்டது. SPG எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு என்பது நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு உயரடுக்கு பாதுகாப்புப் படையாகும். இந்த படையில் தற்போது 3,000 பேர் இருக்கிறார்கள்.
பிரதமருக்கான பாதுகாப்பு என்பது சவால்கள் நிறைந்ததாகும். அரசியல் பேரணிகள் , பிரச்சார பொதுக் கூட்டங்கள் என பல ஆயிரக்கணக்கில் பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பிரதமரை பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அமெரிக்காவைப் போல அதிநவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லாத நிலையிலும் , இந்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக , சாலை மறியல் போராட்டக்காரர்கள், பிரதமர் மோடியின் வாகனத் தொடரணியைத் தடுத்ததில் குறிப்பிடத்தக்க பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது
2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, மோசமான வானிலை காரணமாக, பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்திலிருந்து பிரதமரின் வாகன தொடர் அணி (கான்வாய்) சாலை வழியாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்றபோது போராட்டக்காரர்கள் குழுவுக்கு மத்தியில் சிக்கியது பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 20 நிமிடங்கள் வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் நகர முடியாமல் சிக்கி நின்றது. ஆனாலும் சாதுரியமாக செயற்பட்ட சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக விமான நிலையம் அழைத்து வந்தனர்.
இந்திய பிரதமர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மிகவும் சவாலானது . உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான பிரதமர், பொதுமக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
எப்போதும் மக்களுடன் கலந்துரையாடுவதை இந்திய பிரதமர்களால் தவிர்க்க முடியாது. தேர்தல் காலங்களில் மட்டும் இன்றி , பிற நேரங்களிலும் அரசியல் பேரணி, பொதுக்கூட்டம் என மக்கள் கூட்டத்தின் மத்தியில் தான் இந்திய பிரதமர் செயல் பட முடியும்.
இத்தனை கட்டுப்பாடுகளுடன், இந்திய பிரதமரின் அணுகுமுறைகளை நன்கு அறிந்து , சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்கள் கடமையைச் செம்மையாக செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க ரகசிய முகமை மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கிறது . மேலும் அதிபர்கள் இதை தான் செய்யவேண்டும். இப்படி தான் மக்களுடன் பழக வேண்டும் என்றும் கட்டுப் படுத்துகிறது. அதே வேளையில், சவாலான சூழ்நிலையில் திறம்பட செயல்படும் இந்திய பிரதமர்களை பாதுகாக்கும் SPG-யின் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, மேம்படுத்தப் பட்ட விதிமுறைகளும், புதிய நடைமுறைகளும் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.