கொமொரோஸ் கொடியுடன் வந்த எண்ணெய் கப்பல் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கப்பலில் 13 இந்தியர் மற்றும் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்று பெயரிடப்பட்ட கப்பல், ஓமானின் தொழில்துறை துறைமுகமான டுக்ம் அருகே கடலில் மூழ்கி தலைகீழாக உள்ளது. கப்பலில் எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 117 மீட்டர் நீளம் கொண்ட எண்ணெய்க் கப்பல், யேமனின் ஏடன் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இத்தகைய சிறிய எண்ணெய் கப்பல் பொதுவாக குறுகிய கடலோரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஓமான் அதிகாரிகள் கடல்சார் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
தற்போது வரை, உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில், ஓமன் நாட்டில் உள்ள துக்ம் துறைமுகத்திற்கு அருகில் கப்பல் கவிழ்ந்தது.
ஓமானின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள Duqm துறைமுகம், முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ளது, இதில் குறிப்பிடத்தக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.