“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றியிருந்தார்.
அங்கு ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய ராம்தாஸ் அத்வாலே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான தனது விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இதில் பின்னே இருந்து இயக்கியவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ராம்தாஸ் அத்வாலே, “கூட்டணி கட்சிகளின் ஆதரவு வலிமையாக உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்யும்” என்றார்.