பொதுநலன் கருதி செய்யப்படும் ஸ்டிங் ஆபரேஷன்களுக்காக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் மீது வழக்கு தொடர முடியாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2013-ம் ஆண்டு வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.
அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பத்தனம்திட்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் சந்தித்து வாக்குமூலம் பெற முயன்ற இரு பத்திரிகையாளர்கள் மீது கேரள சிறைகள் மற்றும் சீர்திருத்த மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில், நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர், பத்திகைகளால் நடத்தப்படும் இத்தகைய ஸ்டிங் ஆபரேஷன்கள் சட்டப்படியானதா என்பது வழக்கின் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
எந்தவொரு தவறான நோக்கத்துடனோ அல்லது ஒரு தனி நபரை அவமானப்படுத்தும் நோக்கிலோ ஸ்டிங் ஆபரேஷன் செய்யப்பட்டால் அதற்கு சட்டத்தின் ஆதரவு எப்போதும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு பத்திரிகையாளர்களும் சிறைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்றுள்ளதாகவும், இந்த வழக்கை ரத்து செய்வது பொருத்தமானது என நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி கூறினார்.