சென்னை அம்பத்துார் அத்திப்பட்டு சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் – அத்திபட்டு பகுதியிலிருந்து அயப்பாக்கம் ,அன்னனூர் ,ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை தான் இந்த அத்திப்பட்டு பிரதான சாலை. இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகவும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த சாலையாக இல்லை.
இதே வழியாக தான் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அவசர காலங்களுக்கு தேவைப்படும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்களும் இதே வழியில் தான் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளது.
இந்த சாலையில் செல்லும்போது பலமுறை கீழே விழுந்துவிட்டதாகவும், தினமும் வேலைக்கு செல்வதா? என தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் வாகன ஒட்டி ராமு.
சாலை இது போன்று சிதிலமடைந்து இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
பொதுமக்களின் நலன் கருதியும், வாகன ஓட்டிகளின் சிரமத்தை புரிந்து கொண்டும் சாலையை சரி செய்யும் பணியினை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.