அமலாக்கத் துறை சோதனை, லுக் அவுட் நோட்டீஸ் , முதலீட்டாளர்களுடன் பிரச்னை, ஊழியர்கள் வேலை இழப்பு என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியும் ,அதிவேக சரிவும் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2011ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், மிக குறுகிய காலத்திலேயே கல்வி உலகில் முன்னணி ஆன் லைன் நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. கொரொனா நோய் தொற்று பரவிய ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத வகையில் அபரிதமான லாபத்தையும் வளர்ச்சியையும் பைஜூஸ் கண்டது.
பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் வீடு உட்பட பைஜூஸுக்குத் தொடர்புடைய பல இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 28,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இது மட்டுமல்லாமல், அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 9,754 கோடி ரூபாயை அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக முறையான ஆவணங்களைக் காட்டாமல் 9,362 கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி மோசடியிலும் பைஜூஸ் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ், தனது வருமான வரி கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாமல் இருந்தது. மேலும் நிறுவனம் வாங்கியிருந்த கடன்களுக்கான வட்டித் தொகையையும் செலுத்தாமல் இருந்தது. அமெரிக்கா, நெதர் லாந்து போன்ற நாடுகளிலிருந்து பைஜுஸில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்களும் பைஜூஸ் மீது குற்றம் சுமத்தி பல்வேறு வழக்குகள் பதிவு செய்தன.
பற்பல நிதி சிக்கல்களில் சிக்கி விழி பிதுங்கி இருந்த பைஜூஸ், 2023ஆம் ஆண்டு BCCI உடனான தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிட் ஸ்பான்சர்களான பைஜூஸின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டது BCCI .
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியது.
தங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவையைத் தொகையான 158 கோடி ரூபாயை மீட்டுத் தரச்சொல்லி அந்நிறுவனத்துக்கு எதிராக திவால் BCCI மனு தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கின் முதல் விசாரணையில் பைஜூஸ் நிறுவனத்துக்கு NCLT நோட்டீஸ் அனுப்பியது.
பைஜுஸின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகளை தொடங்க பிசிசிஐயின் மனுவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. பைஜூஸ் கடன் பாக்கி வைத்துள்ளது மற்றும் கடனை செலுத்துவதில் தவறி உள்ளது என்று தெளிவாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
மேலும் பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை இடைநீக்கம் செய்த தீர்ப்பாயம் , பைஜுஸை மேற்பார்வையிட ஒரு இடைக்கால தலைவரை நியமித்துள்ளளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பைஜூஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றத்தில் பைஜூஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம் என்றாலும் , பைஜூஸுக்கு இது பெரிய பின்னடைவு என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ், செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மொத்தமாக ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியது. இதன் தொடர்ச்சியாக, வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.
இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க வகையில், அமலாக்கத் துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.
பைஜூஸ் நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொத்தமாக 26.3 சதவீத பங்குகள் உள்ளன. நிர்வாகக் குழுவில் உள்ள பிற பங்குதாரர்களிடம் சுமார் 32 சதவீத பங்குகள் உள்ளன.
இந்நிலையில், பைஜூஸ் நிர்வாக குழுவும் ரவீந்திரனுக்கு எதிராக திரும்பியது. ரவீந்திரனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருக்க நீக்கவும், அவரின் குடும்ப உறுப்பினர்களை நிர்வாக குழுவில் இருந்து விலக்கவும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றம் ஏறியும், இந்த நிர்வாகக் குழு கூட்டத்தை ரவீந்திரனால் தடுக்க முடியவில்லை.
கேரள மாநிலம் கண்ணூரில் சராசரி ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து சாதாரண டியூஷன் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய ரவீந்திரன் 22 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நிறுவனமாக பைஜூஸை உயர்த்தியது சாதாரண விஷயமல்ல. ஒரு சாதனை தான்.
தனது மனைவி திவ்யா கோகுல்நாத் உடன் சேர்ந்து ரவீந்திரன் பைஜூஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களில் ஆன்லைனில் டியூஷன் வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது.
அதீத வளர்ச்சியைக் கண்ட பைஜூஸ் அதே வேகத்தில் சறுக்கியதற்கு காரணம் அதீத ஆசையும் நிர்வாக குளறுபடிகளும் தாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கொரொனா காலத்துக்குப் பின்னர் ஆன் லைனில் கல்வி கற்க மாணவர்கள் வராததால் பைஜூஸ் நஷ்டத்தை சந்தித்தது. முன்யோசனை இன்றி பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக பல கோடிகளை செலவழித்து வாங்கியது பைஜூஸின் நஷ்டத்தை மேலும் அதிகரித்தது.
தனது சொந்த செலவுகளையும் கட்டுக்கடங்கால் அதிகரித்தும் , பைஜுஸை நடத்த திறமையான தலைமைச்செயல் அதிகாரியை நீண்ட காலமாக நியமிக்காமல் இருந்ததும் பைஜூஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.