வங்கதேசத்தில் அரசு வேலையில் சுதந்திரப் போர் தியாகிகளின் சந்ததியினருக்கான இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, நாடு முழுவதும் மாணவர்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தில் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், நிலையான வேலை மற்றும் நல்ல சம்பளம் என்பதால் பலர் அரசு பணிகளில் சேரவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 3,000 அரசு வேலைகளுக்கான தேர்வில் 4 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்கின்றனர்.
2018ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா, விடுதலை வீரர்களின் சந்ததியினருக்கான ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தார். ஆனால், கடந்த ஜூன் 5ம் தேதி வங்கதேச உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது.
மேலும், வங்கதேசத்தின் 1971ம் ஆண்டு வங்க தேச விடுதலைப் போரில் போராடியவர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத அரசு வேலை ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வங்கதேச உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து, கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்தே நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. என்றாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.
தலைநகர் டாக்காவுக்கு அருகே சவாரில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் அரசு சார்பு மாணவர் அமைப்புக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. காவல்துறையினர் , கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வன்முறையைத் தடுத்தனர்.
வங்கதேசம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் , குறைந்தது ஐந்து பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் வளாகங்களில் வகுப்புகளை ரத்து செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்த அனைத்து கல்லூரிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், அரசு வேலைகளில் தங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.
பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிற விளிம்புநிலைப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அதே வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உறவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்று ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் நஹிட் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, ” சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரப்பிள்ளைகளுக்கு சலுகைகள் கிடைக்கவில்லை என்றால், யாருக்கு அது கிடைக்கும்? ரசாக்கர்களின் பேரக்குழந்தைகளுக்கா?” என்று பிரதமர் ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பி இருந்தார்.
“ரசாக்கர்” என்பது வங்க தேசத்தில் ஒரு ஒரு இழிவான வார்த்தையாகும். அதாவது, 1971ம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஒத்துழைத்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாக “ரசாக்கர்” என்ற சொல் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
பிரதமரின் இந்த கருத்தைத் தொடர்ந்தே போராட்டங்கள் தீவிரமாக மாறியிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, வங்கதேச பயணத்தை தவிர்க்குமாறு இந்திய மக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.