சீனாவில் மக்களுக்கு கிடைக்கும் தினசரி உணவுப் புரதத்தின் அளவு, அமெரிக்காவை விட அதிகம் என ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பில், அடிக்கடி உலக நாடுகளில் தனி நபருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளின் அளவு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது.
2010ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 187 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்தந்த நாடுகளின் உணவு உற்பத்தி செய்யும் அளவுகள், நாட்டின் உணவு இருப்பு நிலைகள் மற்றும் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவின் அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ள படுகின்றன.
இந்த ஆய்வின் படி, சீனாவில், ஒரு தனிநபருக்கு தினசரி 124.61 கிராம் புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில் வளர்ந்த நாடான அமெரிக்காவில், ஒரு தனி நபருக்கு 124.33 கிராம் புரதமே கிடைக்கிறது. ஜப்பானின் தனிநபர் தினசரி புரத சப்ளை 91.99 கிராம் ஆகவும், தென் கொரியாவில் 108.31 கிராம் ஆகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 113.63 கிராம் ஆகவும் மற்றும் ஆஸ்திரேலியாவில் 119.55 கிராம் ஆகவும் தனிநபருக்கு புரத சத்து கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
உணவு இருப்புநிலைக் குறிப்பின்படி, சீனாவைப் போன்ற மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் 2021ம் ஆண்டில் தனிநபர் தினசரி புரத விநியோகம் 70.52 கிராம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் முதல் ஐந்து மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளில், இந்தோனேசியாவில் 79.75 கிராம் ஆகவும், பாகிஸ்தான் 70.77 கிராம் ஆகவும் மற்றும் நைஜீரியா 59.08 கிராம் ஆகவும் என புரத அளவுகளில் பின்தங்கி இருக்கிறது.
ஊட்டச் சத்து அளவுகளில் அமெரிக்காவை எப்படி சீனா முந்தி செல்கிறது என்பதற்கான காரணங்களையும் இந்த ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சீனா தனது புரத விநியோகத்தை இறக்குமதி மூலம் மட்டுமல்லாமல் தீவிர கால்நடை வளர்ப்பு, அத்துடன் விவசாய மற்றும் மீன்வளர்ப்புகள் மூலம் அதிகரித்துள்ளது. இப்படி சீனாவில் உற்பத்தியாகும் ஊட்டச் சத்து நிறைந்த சில உணவுப் பொருட்கள் உலகிலேயே சிறந்த உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, சீன மக்கள் அமெரிக்கர்களைப் போல அதிக இறைச்சி சாப்பிடாமல் புரத சத்துக்களை தாவரங்களில் இருந்தே அதிகம் பெறுகிறார்கள் என்றும் ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் கோதுமை, ஓட்ஸ், அரிசி, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் மூலம் 60.5 சதவிகிதம் என சீனாவின் புரத விநியோகத்தில் அதிகமான தாவரங்களே இடம் பெற்றுள்ளன. .
2021ம் ஆண்டில், சீனாவின் புரத விநியோகத்தில் சுமார் 60.5 சதவீதம் காய்கறிகளின் மூலமே பெறப் பட்டுள்ளது. அதே ஆண்டு அமெரிக்காவில் காய்கறியிலிருந்து 31 சதவீதமே புரத சத்து பெறப் பட்டுள்ளது.
இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டின் மூலமாகவும் புரதம் கிடைப்பதை அதிகரிப்பதில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.