மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தள மென்பொருளில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த வெள்ளிக்கிழமை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன. இதனால், உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் முழுமையாக முடங்கின. இந்த செயலிழப்பு எதனால் ஏற்பட்டது ? என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விண்டோஸின் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது. இந்த பிரச்னை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸில் ஏற்பட்ட சிக்கல் இல்லை.
மாறாக, விண்டோஸில், நிறுவப்பட்ட ANTI VIRUS மென்பொருளால் ஏற்பட்ட ஒரு பிரச்னை தான், விண்டோஸ் செயலிழப்புக்கு காரணம்.
மைக்ரோ சாஃப்ட் மென்பொருள்களுக்கு இணைய பாதுகாப்பு எனப்படும் ANTI VIRUS செக்யூரிட்டி சேவையை வழங்கும் நிறுவனம் Crowdstrike .
இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில், FALCON SENSOR-ல் ANTI VIRUS செக்யூரிட்டி மென்பொருளான Crowdstrike செய்த UPDATE தவறாகி போனதால் வந்த விளைவுதான், உலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன.
இதனால், விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும் கணினிகள் மற்றும் மடி கணினிகளின் முகப்புத்திரை நீல நிறமாக தோன்றி முடங்கின.
உலகமெங்கும் பல்வேறு நாடுகளில், விமான சேவைகள், வங்கிச் சேவைகள்,அவசரகால சேவைகள் மருத்துவ சேவைகள் ஊடகச் செய்தி சேவைகள், பங்கு சந்தை சேவைகள் என பல்வேறு துறைகளிலும், தகவல் தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.
இந்த தொழில் நுட்ப சிக்கல்களுக்கான அடிப்படைக் காரணம் கண்டறியபட்டு, சரிசெய்யப்பட்டதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Crowdstrike நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் குர்ட்ஸ், ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதோடு , இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் CrowdStrike பிரதிநிதிகளுடன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ள CrowdStrike நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்த சிக்கலில் இருந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரிய வருகிறது.
தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், மைக்ரோசாப்ட் மற்றும் CrowdStrike போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தங்கள் சேவைகளின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பராமரிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களால் ரிமோட் மூலம் நிர்வகிக்கப்படும் சாதனங்களை நம்பி உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.
அந்த பெரிய நிறுவனங்களின் ஏற்படும் சிறிய தவறு, நொடியில் உலகத்தையே முடங்க வைத்து விடும் என்பதற்கு விண்டோஸ் செயலிழப்பு நல்ல உதாரணம் .
தொழில்நுட்பம் வேக வேகமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், மைக்ரோசாப்ட் மற்றும் CrowdStrike போன்ற பெரிய நிறுவனங்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே பொதுவான விருப்பமாக இருக்கிறது.