சமீபத்திய ஜம்மு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் துல்லியமான தாக்குதல் நடத்தக் கூடிய , பைனாகுலர் பொருத்தப்பட்ட எம்-4 கார்பைன் என்னும் அமெரிக்க ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இவை பாகிஸ்தான் ராணுவ சிறப்பு சேவைக் குழுவின் (SSG) ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலமாக தீவிரவாதிகளுக்கு கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பகுதியைப் பிரிக்கும் பிர் பஞ்சால் மலையின் தெற்குப் பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
சமீபத்தில் ஜம்முவில் நடந்த மூன்றாவது பெரிய தீவிரவாத தாக்குததலை நடத்தியது, பாகிஸ்தானைத் தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ்-இ -முகமது JeM என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளே என்று தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் நிழல் குழுவான காஷ்மீர் புலிகள் பொறுப்பேற்றுள்ளது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வேரறுக்கவும், தேசத்தைப் பாதுகாக்கவும், இந்திய இராணுவம் பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரஜோரி-பூஞ்ச் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், தோடா-பதேர்வா பகுதியில் சுமார் 20 தீவிரவாதிகளும் பதுங்கி இருந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
சில பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இந்த தீவிரவாதிகளுக்கு ஆலோசனையும் செயல் திட்டமும் வழங்கி வருகிறார்கள் என்றும் கூறும் முன்னாள் காவல்துறை இயக்குனரான ஜெனரல் டாக்டர் எஸ்பி வைத், உள்ளூர் தீவிரவாதிகளும் பாகிஸ்தான் சென்று பயிற்சியும் ஆயுதங்களும் பெற்று வருகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே , ஜம்மு காஷ்மீரில், அமெரிக்க தயாரிப்பான எம்4 கார்பைன் தாக்குதல் துப்பாக்கிகளைப் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எம்4 கார்பைன் ரைபிள்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் உதவி செய்து வருவது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைதான் என்று ராணுவத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டு விட்டு சென்ற எஞ்சிய ஆயுதங்கள் எல்லாம், தற்போது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலம் தீவிரவாதிகளுக்கு கிடைத்திருப்பதும், இந்த தீவிரவாதிகள் அதிநவீன M -4 கார்பன் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
M -4 கார்பன் என்பது அமெரிக்காவில் 1980களில் உருவாக்கப் பட்ட ஒரு தாக்குதல் துப்பாக்கியாகும். M 16A 2 தாக்குதல் துப்பாக்கியின் சிறிய வடிவமாகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தின் காலாட் படையினருக்காக M -4 தயாரிக்கப் பட்டது.
M4 கார்பைன் ஒரு இலகுரக துப்பாக்கியாகும். காற்று-குளிரூட்டப்பட்ட மற்றும் தோள்பட்டையால் சுடப்படும் துப்பாக்கியாகும். 1980களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 500,000 யூனிட்களுக்கு மேல், M4 பல வகைகளில் கிடைக்கிறது. M4 கார்பைன் துப்பாக்கியால் நிமிடத்திற்கு 700-970 சுற்றுகள் சுட முடியும் என்றும், 500-600 மீட்டர் அளவிற்கு சுடலாம் என்றும் கூறப்படுகிறது.
M4 கார்பைன் துப்பாக்கிகள் நேட்டோ படையினரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன,
சிரிய உள்நாட்டுப் போர், ஈராக் உள்நாட்டுப் போர், யேமன் உள்நாட்டுப் போர், கொலம்பியப் போர், கொசோவோ போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் 9/11க்குப் பிறகு நடந்த போர் போன்ற பல போர்களில் இந்த துப்பாக்கி அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
குண்டு துளைக்காத வாகனங்களைக் கூட தூரத்தில் இருந்தே M4 ரக கார்பைன் துப்பாக்கியால் துல்லியமாக அழித்துவிட முடியும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில், ஜம்மு பகுதியில் நடந்த அனைத்து முக்கிய தீவிரவாத தாக்குதல்களிலும் M4 கார்பைன் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்திருக்கிறது.
மேலும், இந்திய இராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப் பட்ட தீவிரவாதிகளிடமிடமிருந்து, பல M4 கார்பைன் துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் ராணுவப் படையினரை அனுப்புவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கி இருப்பதோடு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துல்லியமான உளவுத்துறை நெட்வொர்க்கையும் இந்திய அரசு உருவாக்கி உள்ளது.
பாகிஸ்தானைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் இடமாக மாறியுள்ள ஜம்மு, ரஜோரி, ரியாசி, கதுவா மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இந்திய ராணுவம் கடுமையான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.