ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் வென்று 44 ஆண்டுகள் ஆன நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாகத்தினை தீர்க்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…!
இந்தியாவில் விளையாட்டின் மீதான பார்வை என்னதான் கிரிக்கெட்டின் மீது இருந்து வந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் என்று வந்துவிட்டாலே ஹாக்கி விளையாட்டிற்கான ஆதரவு கொடுப்பதில் இந்தியர்கள் எவரும் பாரபட்சம் காட்டுவதில்லை. ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்று 44 ஆண்டுகள் ஆகிறது.
44 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி என்ற எதிர்பார்ப்புகளோடு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் களமிறங்கியுள்ள ஹர்மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணிக்கு உள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்..
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் தொட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் தங்க பதக்கம் வரை என, 1928 முதல் 1956ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கம் உட்பட மொத்தம் 8 ஒலிம்பிக் தொடர்களில் தங்க பதக்கம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று 44 ஆண்டுகளாகிறது.
கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ஹர்மன்பீரித் சிங் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் அசத்தல் வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு நம்பிக்கை சேர்க்கின்றனர்.
ஸ்ரீஜேஷ், மன்ப்ரீத் சிங் ஆகியோர் 4-வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் அனுபவம் இந்திய அணிக்கு வலு சேர்க்கும். பெனால்டி ஷாட் மற்றும் பென்ல்டி கார்னர் ஷாட்டுகளில் கில்லியான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் சிங், மிட் பில்டர் ஹர்திக் சிங் ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். கேப்டன் ஹர்மன்பீரித் சிங் கஷ்டமான சூழலில் களத்தில் மொத்த நம்பிக்கையை இழந்த போதிலும், ஆட்டத்தின் தன்மையையே மாற்றும் வல்லமை படைத்த மாவீரன் என்றே சொல்லலாம்..
மேலும் ஜர்மன்ப்ரீத் சிங், அபிஷேக் உள்ளிட்ட அறிமுக வீரர்களும் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகின்றனர். இந்த ஒலிம்பிக் தொடருக்காக பல்வேறு வழிகளில் தயாராகி வரும் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது பயிற்சியை ஒவ்வொரு வீரரும் மேம்படுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த சில போட்டிகளில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியா தோல்வியடைந்து. இந்திய அணி நல்ல பார்மில் இல்லை என்றாலும் கூட, வீரர்களின் தனிப்பட்ட ஆட்டத்தின் திறன் அதிகரித்துள்ளது என ஹாக்கி இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள நிலையில் இதே பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பலம் வாய்ந்த அணிகள் இருந்தாலும், இந்திய அணியால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அனைவருடைய மொத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி மீண்டெழுந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி, 44 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்கும் என மொத்த இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது.
அப்படி நடக்கும் என்றால், நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு மும்பையில் கொடுத்த வரவேற்பை போல, இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து கௌரவப் படுத்த, இந்திய மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.